Wa iz awhaitu ilal hawaariyyeena an aaminoo bee wa bi Rasoolee qaalooo aamannaa washhad bi annanaa muslimoon
அன்றி, என்னையும், என்னுடைய தூதரையும் (அதாவது உங்களையும்) நம்பிக்கை கொள்ளும்படி (அப்போஸ்தலர்கள் என்னும் உங்களது) சிஷ்யர்களுக்கு நான் வஹீயின் மூலம் தெரிவித்த சமயத்தில், அவர்கள் (அவ்வாறே) நாங்கள் நம்பினோம்; நிச்சயமாக நாங்கள் (உங்களுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்! என்று கூறியதையும் நினைத்துப் பாருங்கள்" (என்றும் அந்நாளில் கூறுவான்.)
Iz qaalal hawaariyyoona yaa 'Eesab na Maryama hal yastatee'u Rabbuka ai yunaz zila 'alinaa maaa'idatam minas samaaa'i qaalat taqul laaha in kuntum mu'mineen
தவிர (நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்:) அந்த சிஷ்யர்கள் (ஈஸாவை நோக்கி) "மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்களுடைய இறைவன், வானத்திலிருந்து எங்களுக்காக ஓர் உணவு(ப் பொருள்கள் நிரம்பிய) தட்டை இறக்கி வைக்க முடியுமா?" என்று கேட்டதற்கு (ஈஸா, அவர்களை நோக்கி) "மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (இத்தகைய கேள்வி கேட்பதைப் பற்றி) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறினார்.
Qaaloo nureedu an naakula minhaa wa tatam'inna quloo bunaa wa na'lama an qad sadaqtana wa nakoona 'alaihaa minash shaahideen
அதற்கவர்கள், அதிலிருந்து நாங்கள் புசித்து, எங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும், அன்றி நீங்கள் (உங்களுடைய தூதைப் பற்றி) மெய்யாகவே உண்மை கூறினீர்கள் என்று நாங்கள் அறிந்து கொண்டு அதற்கு நாங்களும் சாட்சியாக இருக்கவுமே விரும்புகின்றோம்" என்று கூறினார்கள்.
Qaala 'Eesab nu Maryamal laahumma Rabbanaaa anzil 'alainaa maaa'idatam minas samaaa'i takoonu lanaa 'eedal li awwalinaa wa aakirinaa wa Aayatam minka warzuqnaa wa Anta khairur raaziqeen
அதற்கு மர்யமுடைய மகன் ஈஸா "எங்கள் இறைவனே! வானத்தில் இருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு நீ இறக்கி வைப்பாயாக! எங்களுக்கும், எங்கள் முன் இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன்னுடைய (வல்லமைக்கு) ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். ஆகவே, (அவ்வாறே) எங்களுக்கும் உணவை அளிப்பாயாக! நீயோ உணவளிப்பதில் மிகச் சிறந்தவன்" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
Waalal laahu innee munaz ziluhaa 'alaikum faman yakfur ba'du minkum fa inneee u'azzibuhoo 'azaabal laaa u'azzibuhooo ahadam minal 'aalameen
அதற்கு அல்லாஹ் "நிச்சயமாக நான் (நீங்கள் கேட்டவாறு) அதனை உங்களுக்கு இறக்கி வைப்பேன். (எனினும்) இதற்குப் பின்னர் உங்களில் எவரேனும் (என் கட்டளைக்கு) மாறு செய்தால், அவரை உலகத்தில் எவருக்கும் செய்திராத அவ்வளவு கொடியதொரு வேதனையைக் கொண்டு நிச்சயமாக நான் தண்டிப்பேன்" என்று கூறினான்.
Wa iz qaalal laahu yaa 'Eesab na Maryama 'a-anta qulta linnaasit takhizoonee wa ummiya ilaahaini min doonil laahi qaala Subhaanaka maa yakoonu leee anaqoola maa yakkoonu leee an aqoola maa laisa lee bihaqq; in kuntu qultuhoo faqad 'alimtah; ta'lamu maa fee nafsee wa laaa a'almu maa fee nafsik; innaka Anta 'Allaamul Ghuyoob
அன்றி, அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவை நோக்கி) "மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வுடன் என்னையும், என்னுடைய தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களை நோக்கி நீங்கள் கூறினீர்களா?" என்று கேட்பான் என்பதையும் ஞாபமூட்டுங்கள். அதற்கு அவர் கூறுவார்: "நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகாததை நான் ஒருபோதும் கூறமாட்டேன். அவ்வாறு நான் கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதனை அறிந்திருப்பாயே! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவை அனைத்தையும் நன்கறிபவன்.
Maa qultu lahum illaa maaa amartanee bihee ani'budul laaha Rabbeee wa Rabbakum; wa kuntu 'alaihim shaheedam maa dumtu feehim falammaa tawaffaitanee kunta Antar Raqeeba 'alaihim; wa Anta 'alaa kulli shai'in Shaheed
(அன்றி) நீ எனக்கு ஏவியபடியே நான் (அவர்களை நோக்கி) "நீங்கள் எனக்கும் உங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்று கூறினேனேயன்றி வேறொன்றையும் (ஒருபோதும்) நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களின் செயலை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீதான் அவர்களைக் கவனித்தவனாக இருந்தாய். அனைத்திற்கும் நீயே சாட்சி.
In tu'azzibhum fa innahum ibaaduka wa in taghfir lahum fa innaka Antal 'Azzezul Hakeem
அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன்னுடைய அடியார்களே! (உன்னுடைய அடியார்களை உன் இஷ்டப்படிச் செய்ய உனக்கு உரிமையுண்டு.) அன்றி, அவர்களை நீ மன்னித்துவிட்டாலோ (அதனை தடை செய்ய எவராலும் முடியாது. ஏனென்றால்) நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றாய்" (என்று கூறுவார்.)
Qaalal laahu haaza yawmu yanfa'us saadiqeena sidquhum; lahum janaatunn tajree min tahtihal anhaaru khaalideena feehaaa abadaa; radiyal laahu 'anhum wa radoo 'anh; zaalikal fawzul 'azeem
அதற்கு அல்லாஹ் "உண்மை சொல்லும் சத்தியவான்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாள் இதுதான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்கள் என்றென்றுமே தங்கி விடுவார்கள்" என்று கூறுவான். (அந்நாளில்) அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் மகிழ்ச்சியடைவான். அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சி அடைவார்கள். இது மிக்க மகத்தான பெரும் பாக்கியம்.
Lillaahi mulkus samaawaati wal ardi wa maa feehinn; wa Huwa 'alaa kulli shain'in Qadeer
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், இவைகளிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் (இவை) அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.