Wa minhum mai yaqoolu rabbanaaa aatina fid dunyaa hasanatawn wa fil aakhirati hasanatanw wa qinaa azaaban Naar
அன்றி "எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!" எனக் கோருபவர்களும் மனிதர்களில் உண்டு.
Ulaaa'ika lahum naseebum mimmaa kasaboo; wal laahu saree'ul hisaab
தாங்கள் செய்த (நற்)செயல்களின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத்தான் உண்டு. தவிர, (சிரமமேற்படாத வண்ணம் இவர்களின் செயலைப் பற்றி மறுமையில்) அல்லாஹ் வெகு விரைவாகக் (கேள்வி) கணக்கெடுப்பான். (அவனுக்கு அது சிரமமன்று).
Wazkurul laaha feee ayyaamim ma'doodaat; faman ta'ajjala fee yawmaini falaaa ismaa 'alaihi wa man taakhkhara falaaa isma 'alayh; limanit-taqaa; wattaqul laaha wa'lamooo annakum ilaihi tuhsharoon
(நம்பிக்கையாளர்களே! துல்ஹஜ்ஜு மாதத்தில்) குறிப்பிடப்பட்ட (மூன்று) நாள்கள் வரை ("மினா" என்னும் இடத்தில் தாமதித்திருந்து) அல்லாஹ்வை "திக்ரு" செய்யுங்கள். ஆனால், எவரேனும் இரண்டாம் நாளில் அவசரப்பட்டு(ப் புறப்பட்டு) விட்டால் அவர் மீது குற்றமில்லை. எவரேனும் (மூன்று நாள்களுக்குப்) பிற்பட்(டுப் புறப்பட்)டால் அவர் மீதும் குற்றமில்லை. அவர் இறை அச்சமுடையவராக (இருந்து ஹஜ்ஜுடைய காலத்தில் தடுக்கப்பட்டவற்றிலிருந்து விலகி) இருந்தால் (மட்டும்) போதுமானது. ஆகவே (நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமே (நியாயத் தீர்ப்புக்கு எழுப்பிக்) கொண்டு வரப்படுவீர்கள் என்பதை உறுதியாக அறிந்து அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள்.
Wa minan naasi mai yu'jibuka qawluhoo fil hayaatid dunyaa wa yushhidul laaha 'alaa maa fee qalbihee wa huwa aladdulkhisaam
(நபியே! உங்களிடம்) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி(ப் பேசும்பொழுது) தன்னுடைய (சாதுரியமான) வார்த்தையைக் கொண்டு உங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கக்கூடிய ஒருவன் அம்மனிதர்களில் உண்டு. அவன் (உங்கள்மீது அன்பு கொண்டிருப்பதாகக் கூறி) தன் மனதில் உள்ளவற்றிற்கு (சத்தியம் செய்து) அல்லாஹ்வை சாட்சியாக்குவான். (உண்மையில்) அவன்தான் (உங்களுக்குக்) கொடிய எதிரியாவான்.
Wa izaa tawallaa sa'aa fil ardi liyufsida feeha wa yuhlikal harsa wannasl; wallaahu laa yuhibbul fasaad
அவன் (உங்களிலிருந்து) விலகினாலோ, பூமியில் விஷமம் செய்து (உங்கள்) விவசாயத்தையும் கால்நடைகளையும் அழித்துவிட முயற்சி செய்கின்றான். விஷமத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
Wa izaa qeela lahuttaqil laaha akhazathul izzatu bil-ism; fahasbuhoo jahannam; wa labi'sal mihaad
தவிர, "நீ அல்லாஹ்வுக்குப் பயந்துகொள். (விஷமம் செய்யாதே)" என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) பெருமை அவனை (விஷமம் செய்து) பாவத்தைச் செய்யும்படியே (இழுத்துப்) பிடித்துக் கொள்கிறது. ஆகவே, அவனுக்கு நரகமே தகுதியாகும். நிச்சயமாக (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது.
Wa minan naasi mai yashree nafsahub tighaaa'a mardaatil laah; wallaahu ra'oofum bil'ibaad
அல்லாஹ்வின் (திருப்) பொருத்தத்தைப் பெறுவதற்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யக்கூடியவர்களும் மனிதர்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள்மீது மிகவும் கருணையுடையவன்.
Yaaa ayyuhal lazeena aamanud khuloo fis silmi kaaaffatanw wa laa tattabi'oo khutuwaatish Shaitaan; innahoo lakum 'aduwwum mubeen
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதனைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.
Fa in zalaltum mimba'di maa jaaa'atkumul baiyinaatu fa'lamoo annallaaha 'Azeezun hakeem
(மனிதர்களே! சந்தேகத்திற்கிடமில்லாத) தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்தபின்னும் நீங்கள் (இஸ்லாமில் உறுதியாக இல்லாமல்) நழுவி விடுவீர்களானால் (உங்களைத் தண்டிப்பதில்) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும் (உங்களை எவ்விதம் நடத்தவேண்டும் என்பதை நன்கறிந்த) நுண்ணறிவுடைய வனுமாக இருக்கின்றான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
Hal yanzuroona illaaa ai yaatiyahumul laahu fee zulalim minal ghamaami walmalaaa'ikatu wa qudiyal amr; wa ilal laahi turja'ulumoor
(நபியே! இவ்வளவு தெளிவான வசனங்களையும் நிராகரிக்கும் அவர்கள்) அல்லாஹ்வும் மலக்குகளும் (வெண்) மேகத்தின் நிழலில் அவர்களிடம் வந்து (அவர்களை அழித்து) அவர்களின் வேலையை முடிப்பதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரோ? (அவர்களுடைய) எல்லா விஷயங்களும் (மறுமையில்) அல்லாஹ்விடமே (விசாரணைக்குக்) கொண்டு வரப்படும்.